Tuesday, March 2, 2010

எண்ணங்கள்…

மார்கழியில் பனிகலந்ததை குளிர்காலம் உரைத்தது ! - உன்
….மாளிகைஎங்ஙனும் மங்கியஒளியோர் குங்குமம் இறைத்தது !
போர்வையில் முடங்கிய பொழுதுகளெல்லாம் சுகமாய்க் கழிந்தன ! - தைப்
….பொங்கலின் வரவால் மதியப் பொழுதுகள் பூவாய் இனித்தன !
பார்வையில் பட்ட கழனிகள் மீது பொன்வெயில் அடித்தது ! - அதில்
….பட்டாம் பூச்சிகள் தட்டானோடு அழகாய்த் திரிந்தன !
நேர்வெயில் காணா காட்டுப்பூக்கள் கவிதைகள் படித்திட ! -இள
….நெஞ்சினை உரசிய ஊமைராகம் இசையாய் வெடித்தது !

நாட்டுப்புறத்தில் சிறுநடைபோட்டு இயற்கையை ரசித்திட்டேன்
! - என்
….நினைவுகள் எல்லாம் பட்டிக்காடாய் மாறிடச் செய்திட்டேன் !
ட்டின் வாலில் அழகிய துணியை அணிந்தே மகிழ்ந்திட்டேன் ! - உடல்
….அசைந்திட மறந்தே சோளக்காட்டில் சுகமாய் உறங்கிட்டேன் !
பாட்டுப்பாடும் குயில்களின் கருமை வெய்யிலில் பளபளக்க ! - என்
….பார்வையில பட்ட பொருள்களிளெல்லாம் செம்மை மினுமினுக்க !
….ஏட்டுப் படிப்பு எதற்கென வியந்து இயற்கையின் நிகழ்வுகளில் - இனி
என்றும் நானோர் அடிமையெனவே இனிதாய் வாழ்வேனோ?

Wednesday, February 10, 2010

வீணையடி நீ எனக்கு!

வார்குழலில் சரணம் கொண்ட சங்கராபரணங்களும்
....வெள்ளிக்கெண்டை விழியில் துள்ளும்
கதனகுதூகலமும்
சீர்த்தெழுந்த செவ்விதழ்கள் சிந்தும்
சிந்து பைரவியும்
....செல்வத் தனங் கள் வடிக்கும்
சுப பந்து வராளி யுடன்
சேர்ந்தசையும் சிற்றிடையின்
ஜாலவராளிகளில்
....சிலிர்க்கவைத்து மயக்குகிறாய்
கௌரிமனோஹரியே!
வேர்த்திருக்கும் வாழ்வினிலே தென்றலென
ஹம்ஸத்வனி
....வாசித்திட விரல்விரும்பும் வீணையடி நீ எனக்கு!

ராகங்களில் தேன்குழைத்து
ஸ்வரங்கள் வரும் சாமமதில்
....ராமப்ரியா நீஎனக்கே தாரம்என வாய்த்திருக்க
சோகம்பறந்
தோடிவிட கல்யாணி என்னும் காமமது
....ஸ்ருதி நாட்டக் குறிஞ்சிப்பூ பாளம் சொல்லும்
வேகம் தினம் கூடிவர
கமகம்க்கும் கேசமதில்
....வாகைமலர் சூடிவந்து
ஜதிகள் சொல்லும் சாருகேசீ...
மோகமுள்ளின் கூரொடிக்க முல்லைமலர் தேகமதில்
....மோஹனங்கள் பாடிவரும் வீணையடி நீ எனக்கு!

Tuesday, February 9, 2010

பெருந்தவம்!

அன்னைப் பசுவின் ஆதரவில்

....அடங்கும் இளங்கன்றாய்- நான்

என்னை மறந்து வாழ்நாள் முழுதும்

....இருந்திட வரம் வேண்டும்!


தென்னை சிரித்த சிரிப்பின் ஓசை

....தென்றல் கொண்டுவர - என்

முன்னைப் பிறவியின் ஞாபகமெல்லாம்

....மூளைக்குள் வரவேண்டும்!


புன்னை பூத்த ஆற்றங்கரையில்

....புதுமணம் வீசுகையில் - நான்

தொன்னைப் படகில் பன்னீர்ப் பூவாய்

....தவழ்ந்திடும் சுகம்வேண்டும்!


பொன்னை நிகர்த்த மாலைக் கதிரின்

....பூவிள மஞ்சளிலே- நான்

பின்னைப் பிறவிகள் எல்லாம் கரைந்திட

....பெருந்தவம் வேண்டுகிறேன்!

அர்ப்பணம்!

நீண்ட நாள் கழித்து

நின்றுபோன தொடர்புகளைப் புதுப்பிக்க

புதுக்கவிதையில் உறவுக்கரம் நீட்டி காத்திருக்கும்

காணாமல் போன கவிஞன் நான்!


என் இதயத்தின் கிழிசல்களை - விழி

ஊசியால் தைக்காமல் காதல்பஞ்சினால்

பசை தடவி பக்குவமாய் ஒட்டிவிடு !


கடந்தகால வசந்தங்களில்- நமக்குள்

நடந்த கசந்த நிகழ்வுகளை

கெட்ட கனவுகளாக மறந்திட்டு

எதிர்கால நினைவுகளில்

வண்ணமலர்களாய் சிரித்திரு !


பாலைவன மழைபோல்

பயன்படாது போனாலும்

ஆழ்கடல் மீதுவிழும் நிலவொளியாய்

அழகினையே அள்ளித் தெளித்திடுவோம்

அதை ஆனந்தமாக ரசித்திடும்

ஆன்மாக்களுக்கு அர்ப்பணிப்போம் வா!

இரா. தங்கமணி